
அமரகீர்த்தி அதுகோரல கொலை வழக்கு ; 42 பேருக்கு எதிராக உயர் நீதிமன்றில் விசாரணை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்புக் காவலர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் கம்பஹா நிரந்தர மூவர் கொண்ட உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2022 ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி, நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருந்த சூழலில், அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அமரகீர்த்தி அதுகோரல நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தார்.
அந்தச் சம்பவத்தில் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியும் உயிரிழந்தார்.
இந்த இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், சட்டமா அதிபர் கம்பஹா உயர் நீதிமன்றத்தில் 42 குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
இவ்வழக்கு கடந்த ஜனவரி 14 ஆம் திகதி விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தது. பின்னர் தீர்ப்பு வழங்குவது இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

