
சந்தேகத்திற்கிடமான EP KI-7738 ரக வாகனத்தை உங்கள் வாகனத்திலுள்ள ‘Dash Cam’ பதிவு செய்ததா?பொதுமக்களிடம் உதவி கேட்கும் பொலிஸார்
தலங்கம, அக்குரேகொட பகுதியில் நேற்று மாலை கார் ஒன்றிற்குள் வைத்து தம்பதியினரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
நேற்று மாலை, தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்குரேகொட பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி வாகன தரிப்பிடத்தில் காரில் அமர்ந்திருந்த சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி மீது, மற்றொரு காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த 10 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் சந்தேக நபர்கள் , தப்பிச் சென்ற பாதைகளை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரோமஹம (Rohamagama)
பொத்துஅரவ வீதி (Pothuarawa Road)
அத்துருகிரிய பொலிஸ் பிரிவு
கொட்டாவை மற்றும் மாக்கும்புர ஆகிய பாதைகள் வழியாக சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர் .
சந்தேக நபர்கள் EP KI-7738 என்ற இலக்கத் தகட்டைக் கொண்ட காரில் பயணித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனவே, பெப்ரவரி 13 மாலை வேளையில் மேற்கூறிய பாதைகளில் பயணித்த வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், தங்களது வாகன கெமராக்களில் (Dash Cam) அந்த வாகனம் தொடர்பான பதிவுகள் ஏதேனும் உள்ளனவா என்று சரிபார்க்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
உங்களிடம் ஏதேனும் வீடியோ பதிவுகள் அல்லது தகவல்கள் இருந்தால், மேல் மாகாண தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் – 071 8598008
மற்றும்
மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு பணிப்பாளர் –
071 8592279 ஆகிய தொலைபேசிகளை அழைத்து தகவல்களை தெரிவித்து உதவுமாறு பொலிஸார் கோருகின்றனர்.
வழங்கப்படும் அனைத்துத் தகவல்களும் அதி ரகசியமாகப் பேணப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

