
வங்கதேச இடைக்கால தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் முகமது யூனுஸ்
வங்கதேசம் நாட்டில் 2024 ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.
அதன் பின்னர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
அந்த ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் 18 மாதங்கள் கடந்த நிலையில், கடந்த பிப்ரவரி 12 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் உள்ள 300 நாடாளுமன்ற இடங்களில் 212 இடங்களை கைப்பற்றி தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
BNP சார்பில் போட்டியிட்ட நான்கு சிறுபான்மை சமூக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் கோயேஷ்வர் சந்திர ராய் மற்றும் நிதாய் ராய் சவுத்ரி உள்ளிட்ட இந்துத் தலைவர்களும் அடங்குவர்.
இந்நிலையில், இடைக்கால ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தனது பதவியை நேற்று அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார்.
தொலைக்காட்சி உரையில், “இன்று இடைக்கால அரசு விலகுகிறது. ஆனால், நாம் தொடங்கியுள்ள ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தாரிக் ரஹ்மான் இன்று பிரதமராக பதவியேற்கிறார். முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனான அவர், கடந்த 17 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்தார். கடந்த டிசம்பரில் தாயார் மரணமடைந்ததைத் தொடர்ந்து நாடு திரும்பிய அவர், கட்சித் தலைமையை ஏற்று மூன்று மாதங்களுக்குள் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பிரதமராகிறார்.

