
இம்ரான் கானின் மருத்துவ வசதிகளை உறுதிப்படுத்துமாறு இலங்கை பாராளுமன்றத்தில் கோரிக்கை
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தடுப்புக்காவல் குறித்து மனிதாபிமான அடிப்படையில் கோரிக்கை விடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரால் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முக்கிய எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அஜித் பி. பெரேரா, இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை முன்வைத்து இந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இம்ரான் கானின் உடல்நிலை குறித்த நம்பகமான தகவல்களை மேற்கோள் காட்டிய அவர் , இராஜதந்திர மற்றும் நாடாளுமன்ற ரீதியாக பாகிஸ்தான் அதிகாரிகளுடன் இலங்கை அரசாங்கம் தொடர்பு கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு முறையான மற்றும் சுதந்திரமான மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய பாகிஸ்தான் அரசாங்கத்தை இலங்கை ஊக்குவிக்க வேண்டும்.
சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு இணங்க, அவரை விடுதலை செய்ய அல்லது பொருத்தமான நிவாரணங்களை வழங்க மனிதாபிமான கோரிக்கை விடுக்கப்பட வேண்டும்.
1992 உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்த இம்ரான் கான், இலங்கையிலும் பெரும் மதிப்பிற்குரிய ஒரு விளையாட்டு வீரர் என்பதை இப்பிரேரணையில் சுட்டிக்காட்டபட்டுள்ளது .
அவரது விளையாட்டுத்துறை பங்களிப்பு அரசியல் எல்லைகளைக் கடந்து, இலங்கை போன்ற கிரிக்கெட் விளையாடும் நாடுகளிடையே நல்லுறவை வளர்த்துள்ளதாக பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் மற்றும் விளையாட்டு இராஜதந்திரத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், இலங்கை மக்கள் மற்றும் கிரிக்கெட் சமூகத்தின் நல்வாழ்த்துக்களையும் உணர்வுகளையும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு இலங்கை தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அஜித் பி. பெரேரா சமர்ப்பித்த பிரேரணையில் வலியுறுத்தபட்டுள்ளது.
இதேவேளை லண்டனில் வசிக்கும் இம்ரான் கானின் முதல் மனைவியின் இரு புதல்வர்களும், சிறையிலுள்ள தமது தந்தையின் உடல்நிலையை நேரில் ஆராய்வதற்காக பாகிஸ்தானுக்குச் செல்வதற்கு விசா வழங்குமாறு பாகிஸ்தான் மன்னரிடம் (அரசாங்கத்திடம்) கோரிக்கை விடுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ்செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
தமது தந்தையின் உடல்நிலை குறித்து அச்சமடைந்துள்ள அவரது மகன்களான காசிம் மற்றும் சுலைமான், தமது தந்தையின் கண் கோளாறு தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கம் வெளியிடும் தகவல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அந்தச் செய்திச் சேவைக்கு அறிவித்துள்ளனர்.

