அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு விஜயம்

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு விஜயம்

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் 2026.02.17ஆம் திகதி கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் தற்போதைய நிலைமைகள் (ITI), வசதிகள் மற்றும் அதில் காணப்படும் பிரச்சினைகள் இதன்போது கண்காணிக்கப்பட்டன.

சமூகத்தில் குறித்த நிறுவனத்தின் வகிபாகம் மற்றும் அதன் நிலைமை குறித்த உண்மையான புரிதலை ஏற்படுத்துவது, அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இந்த நிறுவனம் ஆற்றக் கூடிய பங்களிப்பை ஆராய்ந்து மேம்படுத்தலை ஊக்குவிப்பதே இந்த விஜயத்தின் நோக்கம் என கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் கோப் குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

இது நாட்டில் மிக உயர்ந்த அளவிலான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வசதிகளைக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைளை மேற்கொள்வதற்கான வசதிகளைக் கொண்ட ஒரேயொரு நிறுவனமாகும்.

கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திற்குக் காணப்படும் சான்றளிப்பு (Accreditation) மற்றும் சர்வதேச அங்கீகாரம், நிறுவனத்தின் தனித்துவமான தொழில்நுட்ப திறன்கள், விசேட பரிசோதனை சேவைகள் மற்றும் அதற்கான வசதிகள், நிலக்கரி மாதிரிகளை பரிசோதிப்பதில் காணப்படும் பிரச்சினைகள், உராய்வுநீக்கி எண்ணெய் பரிசோதனைக் கூடத்தின் திறமையின்மை போன்ற விடயங்கள் குறித்து குழு கவனம் செலுத்தியது.

கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தில் 6 ஆய்வு மற்றும் அபிவிருத்திப் பிரிவுகளும், பரிசோதனை சேவைகளை வழங்கும் 7 பிரிவுகளும் செயற்படுவதுடன், இவற்றில் மருந்துகள், மூலப்பொருட்கள், இரசாயனப் பொருட்கள், நுண்ணுயிரியல் பரிசோதனை, அளவுத்திருத்தம், மின்னியல் தொழில்நுட்பம், எச்சங்கள் தொடர்பான சோதனைகள் என்பன முன்னெடுக்கப்படுகின்றமை இவ்விஜயத்தின் போது தெரியவந்தது.

சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்பாடு செய்வது, கைத்தொழில்களுக்குத் தேவையான தொழிற்சாலை வடிவமைப்புக்கள் மற்றும் இயந்திரங்கள் தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுப்பது போன்ற சேவைகளையும் இந்நிறுவனம் வழங்கிவருகின்றது.

சான்றழிப்பு மற்றும் சர்வதேச அங்கீகாரம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கிய காரணி சான்றளிப்பு என்றும், இந்நிறுவனம் ISO 17025 (2017) சர்வதேச தரத்தைப் பின்பற்றுகிறது என்பதும் தெரியவந்தது.

ஆரம்பத்தில் சுவீடனில் உள்ள SWEDAC நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தபோதும், 2013ஆம் ஆண்டு முதல் இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான தராதர அங்கீகார சபை (SLAB) மூலம் சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதுடன், மேலும் தற்போது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 1035 க்கும் மேற்பட்ட குறிப்பிட்ட அளவுருக்களுக்கு அங்கீகாரம் பெற்றுள்ளது. ITI நிறுவனம் தேசிய அளவில் முக்கியமான பல பரிசோதனைகளை நடத்துவதுடன், உணவு, நீர் (ஆர்சனிக் போன்றவை), மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றைப் பரிசீலனை செய்வதற்கான வசதிகளையும் கொண்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை, காய்கறிகள் மற்றும் பழங்களில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் உள்ளனவா என்பதைப் பரிசோதிப்பதற்கு அண்மையில் ரூ.143 மில்லியன் மதிப்புள்ள அதிநவீன உபகரணங்கள் இணைக்கப்பட்டுள்ளமையும் இந்த விஜயத்தின் போது தெரியவந்தது.

அத்துடன், நெடுஞ்சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அவசியமான ஒலிப் பரிசோதனை மற்றும் ஒலி வடிவமைப்பை உருவாக்குவது போன்ற விடயங்கள் இந்நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுவதுடன், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிகளைப் பரிசீலிப்பதில் காணப்படும் பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

தற்பொழுது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிகளைப் பரிசீலனை செய்வதற்கு வெளிநாட்டு நிறுவனத்துக்கு ஆறு மாத காலங்களுக்கு ரூ 32 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய ITI நிறுவனத்தின் அதிகாரிகள், சுமார் ரூ. 350 மில்லியன் ஆரம்ப மூலதன முதலீட்டில் (14 உபகரணங்கள் உட்பட) இந்தப் பரிசீலனளை வசதியை அங்கீகாரத்துடன் உள்நாட்டிலேயே நிறுவ முடியும் என்று தெரிவித்தனர்.

நுரைச்சோலை பரிசோதனை கூடத்திற்கு அங்கீகாரம் இல்லையென்பதால் அதன் அறிக்கை சர்வதேச அளவிலோ அல்லது நீதிமன்றத்திலோ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லையென்பதும் இங்கு தெரியவந்தது. இது ஒரு சுயாதீனமான மூன்றாம் தரப்பு பரிசோதனைகூடம் அல்ல என்பது ஒரு பிரச்சனை என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மருந்துகள் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய் பரிசோதனை கூடத்தின் திறமையின்மை காரணமாக நிறுவனம் ஏற்கனவே ஏராளமான கணக்காய்வு விசாரணைகளைப் பெற்றுள்ளது என்றும், அரசாங்க நிதியில் நிறுவப்பட்ட சில வசதிகளைப் பயன்படுத்தாமை சிக்கலுக்குரிய விடயம் என்றும், இந்த ஆய்வுகூடங்கள் அரசாங்க பரிந்துரைகளின்படி நிறுவப்பட்டன என்றும் தெரியவந்தது.

2019 ஆம் ஆண்டு ரூ.99 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிறுவப்பட்ட மருந்துப் பரிசோதனை கூடம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாமையால் செயற்படமுடியாத நிலையில் உள்ளது என்றும், 2017-2020 ஆம் ஆண்டில் ரூ.117 மில்லியன் செலவில் பெட்ரோலியம் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய் பரிசோதனை ஆய்வகம் கட்டப்பட்ட போதிலும், எண்ணெய் மாதிரிகளைப் பெறுவதற்கான வழிமுறை இல்லாததால் அதை முறையாகப் பயன்படுத்த முடியவில்லை என்பதும் இங்கு தெரியவந்தது.

மருந்து சோதனையின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், ஒழுங்குமுறை நிறுவனங்களே சோதனைகளை நடத்துகின்றன, “ஒழுங்குபடுத்துபவரும் புலனாய்வாளரும் பிரிக்கப்பட வேண்டும்” என்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையை புறக்கணிப்பதால் அக்கறைகளின் முரண்பாடு உள்ளது என்பதும் தெரியவந்தது.

அரசாங்க பரிசோதனைகளுக்கு ITI போன்ற அங்கீகாரம் பெற்ற சுயாதீன அரச நிறுவனத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஒரு சட்டப்பூர்வ வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று இங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையையும் சர்வதேச தரநிலைகளையும் பின்பற்றுவதை உறுதிசெய்ய முடியும் என்பதும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விஜயத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம்.அஸ்லம், (சட்டத்தரணி) நிலாந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, ருவன் மாபலகம, அசித நிரோஷன எகொடவிதான ஆகியோர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )