
நவீன கண்காணிப்பு கெமரா வசதிகளுடன் கூடிய இரண்டு வான்கள் பொலிஸாருக்கு
கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக, நவீன கண்காணிப்பு கெமரா அமைப்புகளுடன் கூடிய இரண்டு வேன்கள் இலங்கை பொலிஸாருக்கு நேற்று வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் இந்த வாகனங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
2010 டிசம்பர் 29 அன்று நிறுவப்பட்ட பொலிஸ் மூடிய சுற்று கண்காணிப்பு கெமரா பிரிவு (CCTV Division), ஏற்கனவே இரண்டு கெமரா பொருத்தப்பட்ட வேன்களைப் பயன்படுத்தி வந்தது.
தற்போது அவற்றில் ஒரு வாகனம் அதிநவீன தொழில்நுட்ப அமைப்புகளுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், இரண்டாவது வேனும் மேம்படுத்தப்பட்டு செயல்பாட்டு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வாகனங்களையும் தரம் உயர்த்துவதற்காக 9,794,000 ரூபா செலவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ,விசேட பாதுகாப்பு திட்டங்கள், சமய மற்றும் கலாசார நிகழ்வுகள்.தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள்.போக்குவரத்து தரவு சேகரிப்பு, போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களைக் கண்காணித்தல் போன்ற சந்தர்ப்பங்களில் இந்த வேன்கள் பயன்படுத்தப்படும்.
இந்நிகழ்வில் பிரதி பொலிஸ் மா அதிபர் துஷார குணமலத், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மலின் பெரேரா மற்றும் கண்காணிப்பு கெமரா பிரிவின் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த நவீனமயமாக்கப்பட்ட வாகனங்கள் கள கண்காணிப்பு நடவடிக்கைகளின் செயல்திறனை அதிகரிக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

