
படுவத்த சாமரவின் மனைவியின் 4 கோடி ரூபாய் பெறுமதியான சொகுசு வீடு கையகப்படுத்தப்பட்டது
கொலை செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய சகாவும் , தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மனோஜ் சுரங்க என்கிற பட்டுவத்த சாமரவின் மனைவியின் பெயரில் வாங்கப்பட்ட ஜா-எல, வெலிகம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள 4கோடி ரூபாய் (40 மில்லியன்) பெறுமதியான மூன்று மாடி வீட்டை 7 நாட்களுக்கு முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நேற்று நடவடிக்கை எடுத்துள்ளது.
பட்டுவத்த சாமர என்பவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் இந்த வீடு வாங்கப்பட்டிருக்கலாம் என நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டை இரண்டு மாதங்களுக்கு முன்பு மற்றொரு தரப்பினர் வாடகைக்கு எடுத்து, அங்கு முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அங்கு தங்கியிருந்த 9 முதியவர்களும் 4 தாதிகளும் நேற்று அங்கிருந்து வெளியேறினர்.
படுவத்த சாமரவின் மனைவியான சதுரிகா வீரசூரிய இதற்கு முன்னர் இந்த வீட்டில் வசித்து வந்தார். அந்த நேரத்தில் இந்த வீட்டை இலக்கு வைத்து மூன்று முறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இறுதியாக கடந்த 7-ம் திகதி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த சொத்து தொடர்பாக மேல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து, முடக்கக் கட்டளையை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

