
ஈரானிய தாக்குதலில் சவுதி தளத்திலிருந்த ஐந்து அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதம்
சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான ஐந்து எரிபொருள் நிரப்பும் விமானங்கள் தாக்கப்பட்டதில் சேதமடைந்துள்ளதாக, இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்திய நாட்களில் சவுதி தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் போது இந்த விமானங்கள் தாக்கப்பட்டதாகவும், அவை முழுமையாக அழிக்கப்படவில்லை என்றாலும் சேதமடைந்துள்ளதால் தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருவதாகவும் அந்தச் செய்தி இதழ் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தத் தாக்குதலில் எவரும் கொல்லப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒரு அமெரிக்க விமானம் ஈராக்கில் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், இப்போது தரையில் இருந்த மேலும் ஐந்து விமானங்கள் சேதமடைந்துள்ளன. இது அமெரிக்காவின் வான்வழி எரிபொருள் நிரப்பும் திறனைப் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது .
சவுதியில் உள்ள அமெரிக்கத் தளங்களை இலக்கு வைப்போம் என்று ஈரான் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
ஈரான் தனது போர்க்கப்பலான IRIS Dena தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

