
இதுவரையான தாக்குதல்களில், ஈரானில் 200 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழப்பு
மத்திய கிழக்குப் போர் ஆரம்பித்த நாள் முதல் இதுவரையிலான காலப்பகுதியில், சுமார் 200 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ஊடகப் பேச்சாளர் பாத்திமா மொஹஜெரானி தெரிவித்துள்ளார்.
அரசு ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சுமார் 120 பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தெஹ்ரான் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘ஆசாடி’ (Azadi Tower) கோபுரமும் பலத்த சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஈரானிய கல்வி அமைச்சின் அறிக்கையை மேற்கோள் காட்டி IRNA செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, சுமார் 161 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் காரணமாக 42,914 பேருக்குச் சொந்தமான சொத்துக்கள் அழிவடைந்துள்ளதாக ஈரானிய செம்பிறை சங்கம் (Red Crescent) தெரிவித்துள்ளது.
6,179 வர்த்தகக் கட்டிடங்கள், 36,489 வீடுகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் சுமார் 10,000 கட்டிடங்கள் தெஹ்ரான் நகரில் அமைந்துள்ளவை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நாடு முழுவதும் உள்ள 160-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் அவசர சிகிச்சை மையங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

