புத்தளம் மாவட்டத்தில் பேரிடர் நிவாரணம் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை

புத்தளம் மாவட்டத்தில் பேரிடர் நிவாரணம் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை

பேரிடர் நிலைமை தணிந்துள்ள நிலையில், மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைக் கண்டறியவும், அந்தப் பணிகளைத் துரிதப்படுத்தவும் விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில்(12) புத்தளம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த பேரிடர் நிவாரண சேவைக் குழுக் கூட்டம், அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தலைமையில், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்படும் நிவாரணச் செயற்பாடுகளின் தற்போதைய நிலை குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, பாதிப்புக்குள்ளான 512 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 88 பேருக்கு ஏற்கனவே கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 156 பேருக்கான கொடுப்பனவு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், பேரிடர் காரணமாக 56 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக இங்கு தெரியவந்துள்ளது.

மீள்குடியேற்றம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது அதிகாரிகள் எதிர்நோக்கும் சில நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் அமைச்சரின் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, வெள்ளத்தினால் பாதிக்கப்படாத வகையில் வீடுகளை அமைக்கும் போது சில வீதிகளையும் உயர்த்த வேண்டியுள்ளதாகவும், அவ்வாறு செய்வதால் மற்றுமொரு பாரிய பகுதிக்கு வெள்ளம் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், பல்வேறு காரணங்களை முன்வைத்துச் சிலர் மீள்குடியேறுவதற்கு விருப்பமின்மை தெரிவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. நிவாரண உதவிகளில் தங்கியிருப்போர் அதிகமாக வாழும் இப்பகுதிகளில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி இப்பணிகளை முன்னெடுப்பதிலுள்ள சவால்கள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

இந்தப் பேரிடர் நிலைமையின் போது நிவாரணச் செயற்பாடுகள் மிகவும் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களை மீள்குடியேற்றுவதற்குத் தேவையான முதற்கட்டப் பணிகள் பிரதேச செயலாளர்களின் தலையீட்டுடன் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் மேலும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ்.

ஆலோகபண்டார ஆகியோருடன் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜனக குமார, மொஹமட் பைசல், அஜித் கிஹான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், புத்தளம் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட மாவட்ட அரச அதிகாரிகள், அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் முப்படை, பொலிஸ் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பொது நிருவாகம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )