அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய ஈரான் தேசிய பெண் கால்பந்து அணியின் ஐந்து வீராங்கனைகள்               நேற்று மாலை ஈரானை சென்றடைந்தனர்

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய ஈரான் தேசிய பெண் கால்பந்து அணியின் ஐந்து வீராங்கனைகள் நேற்று மாலை ஈரானை சென்றடைந்தனர்

அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த ஈரான் தேசிய பெண் கால்பந்து அணியின் ஐந்து வீராங்கனைகள், அந்த விண்ணப்பங்களை மீளப் பெற்றுக்கொண்டு ஈரான் திரும்பியுள்ளனர்.

மலேசியா மற்றும் ஓமான் வான்வழியாக பயணித்த இவர்கள், கடந்த புதன்கிழமை மாலை துருக்கி எல்லை ஊடாக ஈரான் நாட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

கடந்த மார்ச் 2-ஆம் திகதி நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் ஆரம்பப் போட்டியின் போது, ஈரான் தேசிய கீதத்தைப் பாடாமல் இவர்கள் அமைதி காத்தனர். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் அறிவித்த சில நாட்களில் இந்த சம்பவம் நடந்தது.

தேசிய கீதத்தைப் பாடாத காரணத்தினால் தங்கள் நாட்டில் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தில், இவர்கள் அவுஸ்திரேலியாவில் மனிதாபிமான விசா கோரி விண்ணப்பித்திருந்தனர்.

இந்த வீராங்கனைகள் அவுஸ்திரேலியாவில் வசிக்கவும், வேலை செய்யவும் மற்றும் படிக்கவும் அனுமதிக்கும் வகையில் விசா விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க், கூறினார்.

இருப்பினும் ஈரானில் உள்ள இவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கடும் அச்சுறுத்தல்கள் காரணமாகவே இவர்கள் தங்கள் முடிவை மாற்றியிருக்கலாம் என மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஈரான் அரசு ஊடகங்கள் இவர்களை “துரோகிகள்” என விவரித்ததோடு, அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தன.

அணியின் தலைவி சஹ்ரா கன்பாரி (Zahra Ghanbari) உட்பட சஹ்ரா சுல்தான் மெஷ்கேகர், மோனா ஹமூடி மற்றும் சஹ்ரா சர்பாலி ஆகிய ஐவர் இவ்வாறு திரும்பியுள்ளனர்.

வீராங்கனைகளின் “தேசபக்தி” காரணமாக எதிரிகளின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக ஈரான் விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தகைய முடிவை எடுக்க அவர்களுக்கு இருந்த பின்னணி குறித்து அவுஸ்திரேலிய அரசால் தலையிட முடியாது என அமைச்சர் டோனி பர்க் தெரிவித்துள்ளார்.

இந்த அணியைச் சேர்ந்த இரு வீராங்கனைகள் மாத்திரம் இன்னும்
அவிஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )