
நாட்டின் வறுமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் பல கேள்விகளை எழுப்பினார்
நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) எழுப்பிய கேள்வி.
இலங்கை இன்னும் குறிப்பிடத்தக்க பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் நிலைக்கு மத்தியில், வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மை மக்கள் வாழ்வில் தொடர்ந்து கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய காரணமாகும்.
குறிப்பாக உணவுப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவை தொடர்பாக வறுமை பன்முக (Multidimensional) வடிவில் வெளிப்படுகிறது. இது தேசிய அவிருத்திக்குத் தடையாக காணப்படும் அடிப்படைப் பிரச்சினையாக அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது.
ஆகையினால், இலங்கையில் வறுமை தொடர்பான தற்போதைய நிலை, அதற்கு பதிலாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தேசியக் கொள்கை தொடர்பான கீழ்க்காணும் விடயங்கள் தொடர்பாக இந்த சபைக்கு விளக்குமாறு மதிப்பிற்குரிய அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
- தற்போது இலங்கையில் வறுமையில் வாடும் மக்கள் தொகை மாவட்டவாரியாக எவ்வளவு?
- அரசாங்கம் வறுமையை எவ்வாறு வரையறுக்கிறது? வறுமையின் காரணமாக ஒட்டுமொத்தமாக நாட்டிற்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்த அரசாங்கத்தின் மதிப்பீடு யாது?
- இலங்கையில் வறுமையை அடையாளம் காண பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ வறுமை கோடு (Official Poverty Line) மற்றும் பன்முக வறுமை குறியீடுகளை (Multidimensional Poverty Indicators) அளவிட பயன்படுத்தப்படும் குறியீடுகள் யாவை? அவற்றை அறிமுகப்படுத்துவதற்கு அடிப்படையான அளவுகோல்கள் (Criteria) யாவை? அண்மைய தரவுகளின்படி இவற்றின் மதிப்புகள் எவ்வளவு?
- வறுமை தேசிய பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து அரசாங்கம் ஆய்வேதேனையும் மேற்கொண்டுள்ளதா?
- மக்களை வறுமையிலிருந்து மீட்பதற்கு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் வருமானங்களை அதிகரிப்பதற்கான திட்டங்கள் யாவை? அவற்றின் முன்னேற்றம் (Outcomes) யாது?
- வறுமை போன்ற ஆபத்தான தேசிய பிரச்சினைக்கு தேசியக் கொள்கை (National Poverty Reduction Policy) அவசியம் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா?
- அத்தகைய கொள்கை வகுக்கப்பட்டுள்ளதா? அதன் முக்கிய அம்சங்கள் (Key Components) யாவை? அது அமுல்படுத்தப்படும் கால எல்லை (Timeline) எது?
- வறுமையால் மிகவும் பாதிக்கப்பட்ட குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனவா? அந்த குழுக்களை தனித்தனியாக எண்ணிக்கையுடன் எடுத்துக் காட்ட முடியுமா? இல்லையெனில், அத்தகைய தரவுகளை தயாரிக்க அரசாங்கத்தால் இதுவரையிலும் முடியாது போய்விட்டதா?
- இத்தகைய குழுக்களை சமாந்திரமாக கவனிப்பதற்கு உத்தேச அரசாங்கத்தின் வேலைத்திட்டம் யாது?
- பன்முக வறுமையை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் குறுகிய கால மற்றும் நீண்ட கால கொள்கை ரீதியிலான நடவடிக்கைகள் யாவை?

