
ஆஸ்திரேலியாவின் இரு மாநிலங்களில் இலவச பொதுப் போக்குவரத்து எரிபொருள் விலை உயர்வையிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கை
மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் மற்றும் விலை உயர்வின் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், ஆஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்கள் தற்காலிகமாக இலவச பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கவுள்ளன.
விக்டோரியா மாநில அரசின் அறிவிப்பின்படி, மார்ச் 31 முதல் ஒரு மாத காலத்திற்கு பொதுப் போக்குவரத்துக்குக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.
டாஸ்மேனியா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 30 முதல் ஜூலை 1 வரை பேருந்துகள் மற்றும் படகுச் சேவைகளுக்கான (Ferries) கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு நிலவுவதுடன், விவசாயம் மற்றும் சுரங்கத் துறைகளுக்கான விநியோகத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், தற்போதைக்கு எரிபொருள் இருப்பு பாதுகாப்பாக உள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மார்ச் 27 அன்று உறுதியளித்துள்ளார்.
உயர்ந்து வரும் எரிபொருள் விலை அந்நாட்டு மத்திய வங்கியின் பணவீக்கக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் சிக்கலாக்கியுள்ளது. ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி ஏற்கனவே வட்டி விகிதத்தை 4.1% ஆக உயர்த்தியுள்ள நிலையில், 2026-இல் மேலும் இருமுறை வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், சர்வதேச சந்தையில் தனியார் துறையினர் மேற்கொள்ளும் கொள்வனவுகளுக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கும் புதிய திட்டங்கள் மார்ச் 30 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

