
மாத்தறையில் சட்டவிரோத உர விற்பனை
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக, மாத்தறையில் சட்டவிரோதமாக உரம் விற்பனை செய்த இடமொன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது.
மாத்தறை மாவட்ட அலுவலக புலனாய்வு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, நிர்ணயிக்கப்பட்ட விலைப் பட்டியல்களை அகற்றி, தயாரிப்பு விவரங்களை மோசடியாக மாற்றி விற்பனை செய்யப்பட்ட யூரியா உரத் தொகையொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சோதனையின் போது, நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி மாற்றங்கள் செய்யப்பட்ட 50 கிலோகிராம் எடையுள்ள 179 மூடை யூரியா உரம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
இதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கைப்பற்றப்பட்ட உரத் தொகை மற்றும் சந்தேகநபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
விலைகளைக் கையாண்டு மற்றும் தயாரிப்புத் தகவல்களைத் தவறாக வழங்கி, நுகர்வோரையும் விவசாயிகளையும் சுரண்டும் வர்த்தகர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் இதன்போது வலியுறுத்தினர்.

