
போர் பதற்றங்களுக்கு மத்தியில் முதன்முறையாக ஜப்பானிய மற்றும் பிரெஞ்சு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தன
ஈரானுக்கு எதிரான போர் ஆரம்பமானதன் பின்னர் முதன்முறையாக பிரான்ஸ், ஜப்பான் மற்றும் ஓமனுக்குச் சொந்தமான கப்பல்கள் நேற்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்த ஒரு சில நாடுகளின் பட்டியலில் ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் தற்போது இணைந்துள்ளன.
ஒரு பிரெஞ்சு கொள்கலன் கப்பல், ஜப்பானுக்குச் சொந்தமான எரிவாயு போக்குவரத்து கப்பல் மற்றும் ஓமனுடன் தொடர்புடைய 3 கப்பல்கள் இவ்வாறு ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்துள்ளன.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரை ஆரம்பித்ததன் பின்னர், ஹார்முஸ் ஜலசந்தி ஊடாகப் பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கிய மேற்கத்திய நாட்டுக்குச் சொந்தமான முதல் கப்பல் இந்த பிரெஞ்சு கொள்கலன் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் ஜப்பானுடன் தொடர்புடைய 45 கப்பல்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்தக் கப்பல்கள் ஈரானால் அங்கீகரிக்கப்பட்ட கடல் பாதை வழியாகப் பயணித்துள்ளதாக சர்வதேச அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எத்தனை கப்பல்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்த ஈரான் அனுமதி வழங்கியுள்ளது என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

