
48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு
நாடு தழுவிய ரீதியில் இன்று (09) காலை 8.00 மணி முதல் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
உள்ளகப் பயிற்சி பெற்றவர்களுக்கான மருத்துவ நியமனங்கள் அறிவிக்கப்பட்ட விதத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
சுமார் 436 புதிய மருத்துவ அதிகாரிகளுக்கான சேவை இடங்கள் தொடர்பான நியமனங்கள் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்களினால் நேற்று (08) அறிவிக்கப்பட்டிருந்தன.
எனினும், இந்த நியமனங்கள் வழங்கப்பட்ட முறையில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் அதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இடமாற்றங்களில் நிலவும் குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த வாரத்திலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பல சந்தர்ப்பங்களில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தது.
இந்த போராட்டங்களின் விளைவாக, நோயாளர்கள் பலரும் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

