ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க அமெரிக்க இராணுவம் நடவடிக்கை, கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளும் ஆரம்பம்

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க அமெரிக்க இராணுவம் நடவடிக்கை, கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளும் ஆரம்பம்

இன்று (ஏப்ரல் 11) அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் USS Frank Peterson மற்றும் USS Michael Murphy ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் இந்த நீரிணை வழியாக பயணித்துள்ளன.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினரால் இடப்பட்ட கடல் கண்ணிவெடிகளை அகற்றி, அந்தப் பாதையை பாதுகாப்பானதாக்குவதே இதன் நோக்கமாகும்.

“இன்று நாங்கள் ஒரு புதிய பாதையை உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம். உலகளாவிய வர்த்தகம் தடையின்றி நடப்பதை உறுதி செய்ய, இந்த பாதுகாப்பான வழிப்பாதை குறித்த விபரங்களை விரைவில் கப்பல் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வோம்,” என மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டொனால்ட் டிரம்ப் தனது ‘Truth Social’ தளத்தில், ஈரானின் கண்ணிவெடி இடும் 28 படகுகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டுவிட்டதாக பதிவிட்டிருந்தார். ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் அணுசக்தி திட்டங்களை அமெரிக்க படைகள் அழித்துவிட்டதாக அவர் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்ததால், உலகளாவிய எரிசக்தி சந்தை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதன் விளைவாக அமெரிக்காவில் பெற்றோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் இந்த நீரிணை மிக முக்கியமான பாதையாகக் கருதப்படுகிறது.

இந்த இராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அமெரிக்க மற்றும் ஈரானிய பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்று நடைபெறுகின்றன .
மோதலில் ஏற்பட்டுள்ள பலவீனமான போர்நிறுத்தத்திற்கு மத்தியில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ‘Truth Social’ தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் ,

“நாங்கள் தற்போது ஹார்முஸ் ஜலசந்தியை சுத்தப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளோம். ஈரானின் கண்ணிவெடிகளை இடும் ‘அனைத்து 28 படகுகளும்’ தற்போது கடலடியில் கிடக்கின்றன.”

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியிருந்தது. அதனை விடுவிக்க அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது ஈரானின் கண்ணிவெடி படகுகளை அழித்துவிட்டு அந்தப் பகுதியை மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் தயார்படுத்தும் பணியில் அமெரிக்க இராணுவம் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கும் இடையே தூதுக்குழு மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் அதேவேளையில் டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )