
நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணித்த அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தொடர்ந்தும் பயணித்தால் தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை
யுத்தம் தொடங்கிய பின்னர் முதன்முறையாக அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்குள் நுழையும் எந்தவொரு அமெரிக்கக் கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்கக் கப்பல்கள் தொடர்ந்து முன்னேறினால், அடுத்த 30 நிமிடங்களுக்குள் அவை இலக்கு வைக்கப்படும். அத்துடன் தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஈரான்-அமெரிக்க பேச்சுவார்த்தைகளும் இதனால் பாதிக்கப்படும், என பாகிஸ்தான் மத்தியஸ்தர்களிடம் ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானின் எவ்வித ஒருங்கிணைப்பும் இன்றி, பல மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக பல அமெரிக்கக் கப்பல்கள் இந்த நீரிணையைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் ஒருவர் ‘கபர் நெட்வொர்க்’ (Khabar Network) ஊடகத்திற்கு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியதாக ‘பார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியைச் சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், ஈரானின் இந்த நேரடி எச்சரிக்கை இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

