
இந்திய உப ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று இலங்கைக்கு வருகை – கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடு
இந்திய உப ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (19) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கின்றார்.
நாளை (20) வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட இராஜதந்திர உறவுகளின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமைகின்றது.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயகே மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் அவர் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தித்வா சூறாவளிப் புனர்வாழ்வு பணிகள், அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதன்போது கையெழுத்தாகவுள்ளன.
அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உப ஜனாதிபதியின் வருகையையொட்டி கொழும்பில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும், அங்கிருந்து விசேட வாகனப் பேரணி மூலம் காலி முகத்திடலில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்குச் செல்வார்.
கட்டுப்பாடுகள்: விமான நிலைய வீதி முதல் கொழும்பு நகருக்குள் அவர் பயணிக்கும் வீதிகள் மற்றும் ஜனாதிபதி செயலகத்தை சூழவுள்ள பகுதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.
நாளை (20) அவர் பயணிக்கும் ஏனைய வீதிகளிலும் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறையில் இருக்கும்.
இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

