மஹரகமை வீடொன்றில் தாயும் மகளும் தீ வைத்து கொலைமேலும் இருவர் காயம்
மஹரகமையில் உள்ள இருமாடி வீடு ஒன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹரகம, பமுணுவ வீதி, எக்சத் சுபசாதக மாவத்தையில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த 55 வயதுடைய தாய் மற்றும் அவரது 16 வயதுடைய மகள் ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்தனர்.
உயிரிழந்த சிறுமியின் தந்தை மற்றும் வீட்டின் உரிமையாளரான 76 வயதுடைய முதியவர் ஆகிய இருவருமே பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (18) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் தீ பரவுவதைக் கண்ட அயலவர்கள் உடனடியாகச் செயற்பட்டு தீயை அணைத்துள்ளனர்.
காயமடைந்த ஆண்களை வைத்தியசாலைக்கு அனுப்பிய பின்னர், வீட்டைச் சோதனையிட்டபோது ஒரு அறைக்குள் தாயும் மகளும் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தில் பெட்ரோல் வாடை வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இது திட்டமிட்டு நடத்தப்பட்ட இரட்டைப் படுகொலை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
இந்தத் தீ வைப்பு மற்றும் கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
மஹரகம பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

