
51 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பங்களாதேஷ் தொழிலதிபர் கட்டுநாயக்கவில் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட 51 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று (19) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள ‘பசுமைப் பாதை’ (Green Channel) வழியாக சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
36 வயதுடைய பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் இன்று அதிகாலை 12.55 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய் ஏயார்வேஸ்நிறுவனத்திற்குச் சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளார்.
சந்தேக நபரின் இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 170 கார்ட்டூன்களில் அடங்கிய 34,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இவற்றின் மொத்த சந்தைப் பெறுமதி சுமார் 51 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அண்மைக்காலமாக இத்தகைய கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

