
செயற்கைக்கோள் தொலைபேசியை வைத்திருந்த இருவர் – இந்திய -ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அனுமதியின்றி செயற்கைக்கோள் தொலைபேசியை வைத்திருந்த இரண்டு நபர்களைப் பாதுகாப்பு அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
ஜெஃப்ரி ஸ்காட் பிராதர் (Jeffrey Scott Prather) என்ற அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரும் ஹால்டர் கௌஷிக் (Haldar Koushik) என்ற கொல்கத்தாவைச் சேர்ந்தவரும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது தொடர்பாகக் கடுமையான விதிகள் உள்ளன . தொலைத்தொடர்புத் துறையிடம் உரிய உரிமம் பெற்ற பின்னரே இவற்றை இந்தியாவில் பயன்படுத்த முடியும்.
வெளிநாட்டிலிருந்து யாராவது இத்தகைய தொலைபேசிகளைக் கொண்டு வந்தால், அவர்கள் வந்திறங்கியவுடன் அதிகாரிகளிடம் அது குறித்துத் தெரிவிக்க வேண்டும் எனவும் சட்டங்கள் உள்ளன.
இதேவேளை ,ஜம்மு-காஷ்மீர் பகுதி பாதுகாப்பு ரீதியாக கவனிக்கப்பட்டு வருகிறது என்பதால் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தங்களுக்குள் தொடர்புகொள்வதற்காகச் செயற்கைக்கோள் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் அபாயம் இருப்பதால், அங்கு இத்தகைய சாதனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தற்போது தடுத்து வைக்கப்பட்ட இருவரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செயற்கைகோள் தொலைபேசியை அவர்கள் எதற்காகக் கொண்டு வந்தனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

