
ஒப்பந்தம் எட்டப்படும் வரை ஹோர்முஸ் முடக்கம் – டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை
தெஹ்ரானுடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரும் வரை, ஈரான் துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள முடக்கங்கள் நீக்கப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய பேச்சுவார்த்தைகள் நடைபெறுமா என்பது குறித்த நிச்சயமற்ற நிலை நிலவி வரும் சூழலில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட இந்த துறைமுக முடக்கத்தினால் ஈரான் முற்றாக அழிந்து வருவதாக டிரம்ப் தனது ‘Truth Social’ சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், இந்த மோதலில் தனது நாடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக போர்நிறுத்தம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டம் பாகிஸ்தானில் நடைபெறுமா என்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த சந்திப்பை எதிர்பார்த்து பாகிஸ்தான் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கவுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இதுவரை வாஷிங்டனில் இருந்து புறப்படவில்லை என்பதுடன், இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதா என்பது குறித்து தாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

