
தமிழக சட்டசபை தேர்தல் ; நாளை வாக்குப்பதிவு
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தீவிர பிரசாரங்களுடன் களைகட்டிய தேர்தல் சூழல், நேற்று (21) மாலை 6 மணியுடன் அமைதியடைந்தது.
நாளை (23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிடுவதால் நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது.
நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதற்கு முன் மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்ளப்படும். வாக்குச்சாவடிகளில் உள்ளும் வெளியும் சிசிடிவி கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், வாக்குப்பதிவை கண்காணிக்க மாநிலம் முழுவதும் மூன்று நிலைகளில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான மையக் கட்டுப்பாட்டு அறை சென்னை தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

