தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததை பகிரங்கப்படுத்திய பெஞ்சமின் நெதன்யாகு                              இரண்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்

தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததை பகிரங்கப்படுத்திய பெஞ்சமின் நெதன்யாகு இரண்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தமக்கு புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer) பாதிப்பு இருந்ததாகவும், அதற்காக அவர் ரகசியமாக சிகிச்சை பெற்றுக்கொண்டதாகவும் நேற்று தெரிவித்தார்.

76 வயதான அவர்,தனது வருடாந்த மருத்துவ பரிசோதனை முடிவுகளை வெளியிடும் போதே அவர் இதனைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த வைத்திய அறிக்கை இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், ஈரான் இதனைத் தனக்கு சாதகமான பிரச்சாரமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவே இத்தகவலைத் தாமதமாக வெளியிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 2024 இல் அவருக்கு புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னரான தொடர் பரிசோதனைகளின் போது, அவரது புரோஸ்டேட் பகுதியில் ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான அளவிலான சிறிய புற்றுநோய் கட்டி (Malignant tumor) இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

கடந்த இரண்டரை மாதங்களாக அவர் கதிர்வீச்சு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். தற்போது அந்தப் புற்றுநோய் பாதிப்பு முழுமையாக நீங்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தான் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேலின் நீண்டகால பிரதமராக இருக்கும் நெதன்யாகு, கடந்த காலங்களில் பல உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்:

திடீர் இதயத் தடை காரணமாக ஜூலை 2023இல் அவருக்கு இதயத் துடிப்பு சீராக்கி (Pacemaker) பொருத்தப்பட்டது.

மார்ச் 2024இல் குடலிறக்க (Hernia) பாதிப்புக்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

டிசம்பர் 2024இல் புரோஸ்டேட் வீக்கத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது கண்டறியப்பட்ட புற்றுநோய் பாதிப்பு மிகவும் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியப்பட்டதால், அது உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவவில்லை என அவரது மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இச்சிகிச்சை காலத்திலும் அவர் தனது பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )