
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.13 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 3 பேர் கைது
ரூ.13 கோடிக்கும் அதிக பெறுமதியான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த மூன்று பேரை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (25) அதிகாலை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கொண்டு வந்த ஐந்து பயணப் பொதிகளைச் சோதனையிட்டபோது, பத்து பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோகிராம் 394 கிராம் குஷ் மற்றும் 1 கிலோகிராம் 912 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 13 கோடியே 39 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இச்சந்தேகநபர்கள் இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஓமான் நாட்டின் மஸ்கட் நகரிலிருந்து சலாம் எயார் நிறுவனத்திற்குச் சொந்தமான OV-437 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவர்த்தகர் மற்றும் ஒரு கட்டிடத் தொழிலாளி எனவும், மற்றைய நபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய வர்த்தகர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று விமானப் பயணிகளும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, ரூ.8 கோடி பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் 37 வயதுடைய ஒருவர் இன்று (25) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்தேகநபர் ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும், அவர் ஒரு இரவு விடுதியில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றி வருபவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

