
அமெரிக்காவும் ஈரானும் சமாதான ஒப்பந்தத்தை மிகவும் நெருங்கிவிட்டது – டிரம்ப் டிரம்ப் ஆகாயத்தில் கோட்டை கட்டுகிறார் – ஈரான்
அமெரிக்காவும் ஈரானும் சமாதான ஒப்பந்தத்திற்கு “மிகவும் நெருக்கமாக” இருப்பதாகவும், ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்
இந்த கருத்தை ஈரான் அரசு ஊடகங்கள் கேலி செய்துள்ளன.
ஈரானுடன் மிகவும் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதன் மூலம் அமெரிக்காவிற்கு இலவச எண்ணெய் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் சுதந்திரமான போக்குவரத்து கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஈரானின் உத்தியோகபூர்வ ஊடகமான IRIB, ட்ரம்பின் இந்தக் கூற்றை “ஆகாயத்தில் கோட்டை கட்டுவது போல ” என விமர்சித்துள்ளது.
அத்துடன் ஈரானிய பழமொழி ஒன்றை மேற்கோள் காட்டி, “பசியோடு இருக்கும் ஒட்டகம் உறங்கும் போது, தனக்கு மிகவும் பிடித்த பருத்தி விதைகளைத் உண்பது போலக் கனவு காணும்.” என்று நிறைவேறாத ஆசைகளை டிரம்ப் கூறுவதாக கேலி செய்து பதிவிட்டுள்ளது.
கடந்த காலங்களில் டொனால்ட் ட்ரம்பைக் கேலி செய்வதற்காக ஈரானின் முன்னாள் உயர் தலைவர் அலி கமேனி இந்தப் பழமொழியைப் பயன்படுத்தியிருந்தார்.
ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை 20 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்குமாறு அமெரிக்கா கோரியுள்ள போதிலும், ஈரான் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே அதனை நிறுத்த முன்வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
யுரேனியத்தைச் செறிவூட்டும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும், அதன் அளவு குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பும் சமாதான முயற்சிகளின் ஒரு அங்கமாகப் பார்க்கப்படுகிறது.

