
வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் 4 பேர் கைது
600 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நான்கு சந்தேகநபர்கள் நேற்று (11) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நால்வரும் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன் அவர்கள் வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, பம்பலப்பிட்டிய மற்றும் கொஸ்வத்த பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அண்மைக் காலங்களில் கைப்பற்றப்பட்ட அதிகளவான சிகரெட் தொகை இதுவாகும் என அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சந்தேகநபர்கள் நால்வரும் விமான நிலையத்தை விட்டு பல்வேறு வகையில், வெளியேற முயன்றபோதும் அவர்களது அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அவர்களை சோதனையிட்டபோது அவர்களின் 20 பைகளிலிருந்து மேற்படி சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி 600 இலட்சம் ரூபாய் எனவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

