
நெடுந்தீவுக்கு அருகில் படகு கவிழ்ந்து விபத்து
நெடுந்தீவிற்கு அருகில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகொன்று நேற்று (12) கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுப்பயணிகளை ஏற்றும் சிறிரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளதுடன் பயணிகள் 12 பேர் 02 பணியாளர்கள் என 14 பேர் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்
தென்னிலங்கையைச் சேர்ந்த 12 சுற்றுலா பயணிகளுடன் நெடுந்தீவுக்கு சென்ற படகு குறிகாட்டுவான் திரும்பும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இடைக்கடலில் குறித்த சுற்றுலா படகில் இருந்து வெள்ளைக்கொடி காட்டுவதனை அவ்வழியே சென்ற நெடுந்தீவு தனியார் படகொன்றின் பணியாளர்கள் அவதானித்து விரைந்து செயற்பட்டு சேதமடைந்த படகில் இருந்து சகல சுற்றுலாப் பயணிகளையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.
எனினும் ஓரிரு நிமிடங்களில் குறித்த விபத்திற்குள்ளான படகு முழுமையாக கடலில் முழ்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னர் கடற்படையின் படகு குறித்த இடத்திற்கு விரைந்து மீட்கப்பட்ட பயணிகளை தங்களது படகில் ஏற்றிக்கொண்டு குறிகாட்டுவானை சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதீபன்

