அனைத்து மக்களுக்கும் நியாயமான விலைக்கு மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்

அனைத்து மக்களுக்கும் நியாயமான விலைக்கு மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்

இலங்கையை பிராந்தியத்தின் குறைந்த மின்சார கட்டணத்தைக் கொண்ட நாடாக மாற்றுவதன் மூலம், நாட்டின் அனைத்து மக்களுக்கும் நியாயமான விலைக்கு மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

தேசிய மின்சாரத் தேவையின் 12% அதாவது 350 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கெரவலப்பிட்டிய “சோபாதனவி” ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்தை செப்டம்பர் 17ஆம் திகதி திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

image

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

“வலுசக்தித் துறையில் தொடர்ச்சியாக மாற்றம் பெற்று வரும் நுகர்வோரின் தேவைகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் கட்டமைப்புக்களுக்கு ஏற்ப மாற்றம் பெற்று, நிலையான தன்மை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்திய மாறுதலடையும் யுகத்தை உலகம் தற்போது கடந்து கொண்டிருக்கிறது.

உலகளாவிய போக்குகள் இவ்வாறு இருக்கும் பின்னணியில், பிராந்தியத்தில் மின்சாரக் கட்டணம் அதிகமாக இருக்கும் நாடுகளில் இலங்கை உயர்ந்த ஸ்தானத்தில் இருந்து வருகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் நாடு வீழ்ந்திருக்கும் பொருளாதாரப் படுகுழியிலிருந்து மீண்டு வருவதற்கான உற்பத்திப் பொருளாதாரத்திற்குள் நுழைவதற்கான பிரதான தடையாக தாங்க இயலாத இந்த வலுசக்திச் செலவினமே இருந்து வருகின்றது.

image

அதிக மின்சாரச் செலவைக் குறைக்கும் நோக்கியே, எமது அரசாங்கம் புதிய வலுசக்தித் துறைகள், குறிப்பாக சூரிய வலுசக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி விசேட கவனம் செலுத்தி வருகிறது.

இலங்கையை பிராந்தியத்தின் குறைந்த மின்சார கட்டணத்தைக் கொண்ட நாடாக மாற்றுவதற்காக, கொள்முதல் மற்றும் விலைமனுக்கோரல் ஆகிய செயல்முறைகளை அமுல்படுத்தி, மசகு எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தியைச் சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களுக்கு மாற்றியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாட்டின் அனைத்து மக்களுக்கும் நியாயமான மற்றும் மலிவான விலையில் மின்சாரத்தை வழங்குவதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பணியில் உற்பத்தியாளர்களை அதிகளவில் பங்களிக்கச் செய்வது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

image

அத்துடன், உள்நாட்டுப் பொறியியலாளர்கள் மற்றும் உள்நாட்டு மனிதவளத்தைக் கொண்டு இந்த மின் உற்பத்தி அமைப்பு உருவாக்கப்பட்டதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

அத்தோடு, நிறுவன ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தேவையற்ற மின்சாரப் பயன்பாடுகளை மட்டுப்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்குமாறும் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )