
ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் பாதக விளைவுகளில் இருந்து பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலையில், ஆஸ்திரேலியா மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனீஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், எக்ஸ், யூடியூப், ஸ்நாப்சாட் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் குழந்தைகளின் மனநலத்திற்கும் உடல் நலத்திற்கும் தீங்கு விளைவித்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் சூழலில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அவற்றை தடை செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தினார். இந்த நிலைப்பாட்டுக்கு எதிர்க்கட்சியும் முழு ஆதரவு தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, “ஆன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் – 2024” என்ற மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் 16 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடக கணக்குகளைத் தொடங்கவோ, பயன்படுத்தவோ தடை செய்யும் விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
இதன் பேரில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், யூடியூப், ஸ்நாப்சாட், எக்ஸ், ரெடிட், ட்விட்ச், கிக், த்ரெட்ஸ் உள்ளிட்ட தளங்களைப் பயன்படுத்த சிறார்களுக்கு அனுமதி இல்லை.
சட்டத்தை மீறி 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு கணக்குகள் உருவாக்க அனுமதித்தால், சம்பந்தப்பட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு ரூ. 296 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது.

