
இந்த இக்கட்டான சூழ்நிலையில் வெனிசுலாவில் மீண்டும் அமைதி நிலவ வேண்டும்
வெனிசுலா மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியதாகவும், அந்நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையடுத்து, வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரோம் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் திரண்டிருந்த மக்களிடையே போப் லியோ உரையாற்றினார்.
வெனிசுலாவில் நிலவும் அரசியல் மற்றும் சமூக நெருக்கடி குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்து அவர் பேசினார்.
அப்போது அவர், “இந்த இக்கட்டான சூழ்நிலையில் வெனிசுலாவில் மீண்டும் அமைதி நிலவ வேண்டும். அந்நாட்டின் தன்னாட்சி மற்றும் இறையாண்மை பாதுகாக்கப்படுவது அவசியம்.
புவிசார் அரசியல் கணக்குகளை விட, வெனிசுலா மக்களின் நலனே முதன்மை பெற வேண்டும். வன்முறையை கைவிட்டு, நாடு அமைதி மற்றும் நீதியின் பாதையில் பயணிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
மேலும், இந்த நெருக்கடியால் வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான மற்றும் சட்ட ரீதியான பாதிப்புகள் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

