
நாளை கரிநாளாக அனுஷ்டிக்க அழைப்பு ; சிவஞானம் சிறிதரன்
தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் தீர்வும் முழுமையான சுதந்திரமும் இன்னும் கிடைக்காத நிலையில், நாளைய தினம் கரிநாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இன்று அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார்.
நாளைய தினம் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கவுள்ள போராட்டம் மிகவும் பெறுமதியானதாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட இனமாகக் கருதப்படுவதாகவும், இந்த நாட்டில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் முறையின் கீழ் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகள் ஏழு ஆண்டுகளைத் தாண்டியும் இதுவரை தீர்வு காணப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், சுதந்திர தினத்தன்று அனுஷ்டிக்கப்படவுள்ள கரிநாளுக்கு வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
பிரதீபன்

