
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி சம்மதம் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 18%-ஆகக் குறைத்த டிரம்ப்
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்..
ரஷ்யாவிற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்க முடியும் என டிரம்ப் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தான் பேசிய பிறகு அறிவிப்பை வெளியிட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பொருட்களுக்கு எதிரான வரி மற்றும் வரி அல்லாத தடைகளை பூஜ்ஜியமாக குறைக்கவும் சுமார் 500 பில்லியன் டொலர் பெறுமதியான எரிசக்தி (நிலக்கரி உட்பட) அமெரிக்கப் பொருட்களை வாங்கவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
2022 யுக்ரைன் போருக்குப் பிறகு மலிவான விலையில் ரஷ்யாவின் எண்ணெயை இந்தியா கொள்வனவு செய்துவந்த நிலையில் இதை நிறுத்துமாறு டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். தற்போது இந்தியா அதற்குச் சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் யுக்ரேனில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் போரை நிறுத்த ரஷ்யாவின் எண்ணெய் வருவாயைக் குறிவைப்பதே சிறந்த வழி எனவும் இந்த நடவடிக்கை, யுக்ரைனில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் அறிவிப்பிற்கு X பதிவினூடாக பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
“இந்த வரி குறைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு டிரம்பின் தலைமை முக்கியமானது. நமது உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல அவருடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்.” எனவும் பதிவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள முக்கிய இந்திய நிறுவனங்களான ,
Infosys, Wipro,HDFC Bank ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக உயர்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டில் அமெரிக்கா விதித்த கடுமையான வரிகளால் இந்தியப் பங்குச்சந்தை பெரும் சரிவைச் சந்தித்திருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது எட்டப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை வலுப்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், இந்த வரி குறைப்பு எப்போது அமுலுக்கு வரும் மற்றும் ரஷ்ய எண்ணெயை நிறுத்துவதற்கான காலக்கெடு என்ன என்பது போன்ற விரிவான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

