
என்னையும் அம்மாவையும் அப்பாவையும் , வேண்டுமானால் 90 பவுன் செயின் அணிந்த நாயையும் கொண்டு வருகிறேன் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
“என்னை, அம்மாவை, அப்பாவை, ஏன் 90 பவுன் சங்கிலி அணிந்திருக்கும் நாயைக் கூட நான் கொண்டு வந்து ஒப்படைக்கிறேன். ஆனால், தயவு செய்து மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.”
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) நேற்று வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
” “இவ்வாறான விசாரணைகளுக்கு அழைத்து எம்மை பயமுறுத்தி, எமது வாய்களை மூடிவிட முடியாது. அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க பொலிஸாரைப் பயன்படுத்துகிறது.”
“நிலக்கரி ஊழல், 6-ஆம் தர மாணவர்களின் பாடப்புத்தகங்கள் ஊடாக மனதை விகாரப்படுத்தும் முயற்சி மற்றும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி அவர்களை வீதிக்கு இறக்கியுள்ளமை குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும். இவற்றை எதிர்த்துப் பேசுவதை நாங்கள் நிறுத்தப்போவதில்லை.”
“நாமலை சிறையில் அடைப்பதா இல்லையா என்பதை பாராளுமன்றத்தில் உள்ள அந்த 15 பேரின் பேச்சைக் கேட்டாலே புரிந்து கொள்ள முடியும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
CID யில் “கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் நான் பதிலளித்தேன். நான் ஏற்கனவே சொன்னது போல, சாதாரண தர (O/L) கருத்தரங்குகள், உயர்தர (A/L) கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் இளைஞர் அமைப்பு கூட்டங்களில் நான் கலந்துகொண்ட புகைப்படங்களைக் காட்டி அவர்கள் கேள்விகளைக் கேட்டார்கள், அதற்கு நான் உரிய பதில்களை வழங்கினேன்.
இருப்பினும், அரசாங்கம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் என்னிடம் எத்தனை கேள்விகளைத் தொடுத்தாலும், நான் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதிலில்லை.
அந்த இரண்டு போதைப்பொருள் (தூள்) கொள்கலன்களை (Containers) தப்பவிட்டது யார்?
323 கொள்கலன்களை தப்பவிட்டது யார்?
நுவரெலியாவில் இருப்பதாகச் சொல்லப்பட்ட அந்த ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருள் தொழிற்சாலை எங்கே?
ஹோமாகமவிற்கும் மித்தேனியவிற்கும் ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கொண்டு வந்து சேர்த்தது யார்?
இவற்றுக்கு இன்னும் பதிலில்லை. ஆனால் என்னிடம் பதில் கேட்கிறார்கள். நான் எப்படி பதில் சொல்ல முடியும்? அரசாங்கம் அவர்களுடையது தானே!”

