இந்தியாவுடனான உறவை மீண்டும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – பங்களாதேஷ் விளையாட்டுத்துறை அமைச்சர்

இந்தியாவுடனான உறவை மீண்டும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – பங்களாதேஷ் விளையாட்டுத்துறை அமைச்சர்

பங்களாதேஷின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள அமினுல் ஹக் (Aminul Haque), இந்தியாவுடனான கிரிக்கெட் உறவை மீண்டும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தற்போது நடைபெற்று வரும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணியின் பங்கேற்பு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை விரைவில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு பின்னர், டாக்காவில் இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்து அமினுல் ஹக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கிடையிலான விளையாட்டு தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
“எல்லா அண்டை நாடுகளுடனும் நட்புறவை பேண விரும்புகிறோம். டி20 உலகக் கிண்ண விவகாரத்தை விரைவில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிப்போம்,” என தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ணத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

ஆனால், அரசியல் மற்றும் தூதரக பதற்றங்களின் காரணமாக, இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் பங்களாதேஷ் அணி பங்கேற்க வேண்டாம் என்ற முடிவை முந்தைய அரசு எடுத்திருந்தது.

இதன் விளைவாக, உலகக் கிண்ணத் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணி நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு ஸ்கொட்லாந்து அணி சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )