
இயலாமை உடைய நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கிலான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு
இயலாமை உடைய நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட ரீதியில் கருத்துக்களை அறிந்துகொள்ளும் கலந்துரையாடல் நிகழ்வின் மூன்றாவது அமர்வு அண்மையில் (27) மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது.
பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதில் குறித்த ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசபுத்திரன் இராசமாணிக்கம், (வைத்தியர்) இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து சிறிநேசன், கந்தசாமி பிரபு உள்ளிட்டவர்களும் இதில் பங்கேற்றனர். உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரவீன், மாவட்ட சமூக சேவை அதிகாரி சந்திரகலா ஞானேஸ்வரன் உள்ளிட்ட சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள், சமூக அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் இயலாமையுடைய நபர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

புள்ளிவிபரங்களுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,000ற்கும் அதிகமான இயலாமையுடைய நபர்கள் வாழ்ந்து வருவதுடன், இவர்களுக்கு 14 அமைப்புக்கள் ஒத்துழைப்புக்களை வழங்கி வரும் நிலையில் இந்தக் கலந்துரையாடல் முக்கியமானதாக அமைந்தது. இம்மாவட்டத்தில் உள்ள 183 இயலாமையுடைய மாணவர்களுக்கு 23 கல்வி அலகுகளில் சேவையாற்றுவதற்கு பயிற்றுவிக்கப்பட்ட 21 ஆசிரியர்களின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் எடுத்துக் கூறினார். இயலாமையுடைய நபர்களுக்கான உத்தியோகபூர்வ அடையாள அட்டையை வழங்குதல், சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் பொதுக் கட்டடங்களில் நுழைவதற்குக் காணப்படும் மட்டுப்பாடுகள் குறித்தும் அவர் இங்கு தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த.த சில்வா, அனைவரையும் உள்ளடக்கிய சமூகமொன்றை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றோம். அரசாங்க வேலைவாய்ப்புக்களுக்கான போட்டிப் பரீட்சைகளில் தேர்ச்சி பெறுவதில் இயலாமையுடைய நபர்களுக்குக் காணப்படும் தடைகள் குறித்து கல்வி அமைச்சுடன் இம்மாதத்தில் கலந்துரையாடல் நடத்தவிருப்பதாகவும் ஒன்றியத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார். இதனால் இயலாமையுடைய நபர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறுப்பு எமக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகளும், அரசியல் அதிகாரிகளும் இணைந்து இதனை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள், மட்டக்களப்பில் இதுவரை எவ்வித உதவிகளையும் பெற்றுக்கொள்ளாத இயலாமையுடைய நபர்களைக் கண்டறிந்து அவர்களையும் உள்வாங்குவது முக்கியமானது என வலியுறுத்தினார். யுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இயலாமையுடைய நபர்களாக்கப்பட்டவர்களுக்கான வசதிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊடாகப் பெற்றக் கொடுப்பதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இயலாமை உடைய நபர்களுக்கான வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள் பற்றியும், அவ்வாறான நபர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் பற்றியும் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

அத்துடன், பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சேவை வழங்கலில் தொடர்ந்து நிலவி வரும் குறைபாடுகளையும், மாற்றுத்திறனாளிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் நடைமுறை சவால்களையும் குறித்து கவனம் செலுத்தினர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இயலாமைய உடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் தாம் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் குழுவிற்கு எடுத்துரைத்தனர். கல்விக்கான மானியங்களை நீடிப்பது, பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பரீட்சைகளில் தோன்றும்போது காணப்படும் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் பிரையில் போன்ற மாற்று ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது, வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறச் செய்யும்போது நேர விரயத்தைத் தடுப்பதற்கு முன்னுரிமை வழங்குதல், அரசாங்க அலுவலகங்களை நாடும் இயலாமை உடையும் நபர்கள் படிகளில் ஏறவேண்டிய தேவை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதால் அதற்கான வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட தமக்குக் காணப்படும் பிரச்சினைகளை இங்கு முன்வைத்தனர்.

இவ்வாறு முன்வைக்கப்பட்ட சில பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், ஏனையவை மாவட்ட அதிகாரிகளுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன. அத்துடன், சில விடயங்களுக்கான தீர்வை எட்டுவதற்கு நீண்டகால கொள்கை மறுசீரமைப்புக்கான தேவையை ஒன்றியம் வலியுறுத்தியது.
மாவட்ட ரீதியாகச் சென்று நாடு முழுவதிலும் உள்ள இயலாமை உடைய நபர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அதற்குத் தேவையான தீர்வுகளை முன்வைப்பதில் ஒன்றியம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஒன்றியத்தின் தலைவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வானது, அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அனுசரணையின் கீழ் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

