
எரிபொருள் QR பிரச்சினைக்கு இன்று தீர்வு
எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களின் பிரச்சினைகள் இன்று (19) தீர்க்கப்படும் என்றும், நாளைக்குள் (20) அவை முழுமையாக சீராகும் என்றும் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர், சில மாவட்டங்களில் வழக்கத்தை விட இருமடங்கு எரிபொருள் நுகர்வு பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
புதிய கைபேசி எண்களைப் பயன்படுத்துபவர்கள், பழைய மற்றும் புதிய வாகன உரிமையாளர்கள் சிலர் இன்னும் QR குறியீட்டை பெற முடியாமல் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், அவர்களது பிரச்சினைகள் இன்று தீர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, பழைய வாகனம்–பழைய கைபேசி எண் மற்றும் புதிய வாகனம்–புதிய கைபேசி எண் கொண்டவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும் கூறினார்.
மேலும், 2023 ஆம் ஆண்டில் சுமார் 70 இலட்சம் பேர் QR முறைமையின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், இவ்வாண்டில் அது 72 இலட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் சுமார் 55 இலட்சம் பேர் QR முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பழைய தரவு அமைப்பில் இருந்த சுமார் 27 இலட்சம் பதிவுகள் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டதாகவும், அந்த செயல்முறைக்கு இரண்டு நாட்கள் எடுத்ததாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
சில கிடங்குகளில் சாதாரண அளவைக் காட்டிலும் இரண்டரை மடங்கு அதிகமாக எரிபொருள் விற்பனை நடைபெறுவதாகவும், அவற்றில் எண்ணெய் சேமிப்பதற்கோ அல்லது மாற்றுவதற்கோ போதுமான வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போதைய அழுத்தநிலையை சமாளிக்கவே ஒற்றை–இரட்டை எண் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், இல்லையெனில் QR முறைமையே தேவையை நிறைவேற்றியிருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், வாகன எண் பலகை இல்லாதவர்களுக்கும் எரிபொருள் பெறுவதில் தடைகள் இல்லை என அவர் கூறினார். வாகன வருமான அனுமதி, புகை சான்றிதழ், வாகனப் பதிவு புத்தகம் அல்லது காப்பீடு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்தால் எரிபொருள் பெற முடியும் என்றும் விளக்கினார்.
நாளையிலிருந்து நிலைமை இயல்புக்குத் திரும்பும் என்றும், பின்னர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

