
இருதய அறுவை சிகிச்சைகளுக்கான வரிசை 2029 ஆம் ஆண்டு வரை நீண்டு காணப்படுகின்றன
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று( 2025.10.21) கேட்ட கேள்வி.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சாசனத்தின் படி, சுகாதாரம் ஓர் மனித உரிமையாகக் கருதப்படுகிறது.
வினைதிறனான சுகாதார சேவையை முன்னெடுப்பதற்கும், உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப சுகாதார சேவைகளை வழங்குவதற்கும், நோயாளிகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுப்போம் என்று தற்போதைய அரசாங்கம் தனது கொள்கை அறிக்கையின் மூலம் மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளது.
இருப்பினும், தற்போதைய சுகாதாரத் துறையில் நிலவும் ஏராளமான பிரச்சினைகள் காரணமாக, நோயாளிகள் போலவே சுகாதாரத் துறையில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் என இருதரப்பினரும் கடுமையான சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்த விடயத்தில் அரசாங்கத்தின் அவதானத்தை திருப்பும் முகமாக பின்வரும் கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன்.
- 2025.10.12 ஆம் திகதி பத்திரிகை விளம்பரமொன்றின் மூலம் எந்தவொரு நபருக்கும் முன் மருத்துவமனை பராமரிப்புச் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் அவசரகால சிகிச்சை சேவைகளை இலவசமாக வழங்குவதற்காக நிறுவப்பட்ட 1990 சுவசெரிய அறக்கட்டளை ஆம்புலன்ஸ் சேவையின் பெயரை மாற்றி “1990 இலங்கை அவசர மருத்துவ சேவை” என பெயரிடப்பட்டுள்ளமை எக்காரணத்துக்காக என்பதையும்?
அந்த ஆம்புலன்ஸ்களின் நிறத்தை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ? அது எப்போதிலிருந்து? - விபத்தொன்று நடந்த இடத்தை விரைவாக வந்தடையும் ஆம்புலன்ஸ் சேவையாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட 1990 சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவையின் நோக்கங்களை மாற்றுவதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவுகளை எடுத்திருக்கிறதா?
கடந்த ஆண்டில் சுவசெரிய அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரகால சுகாதார சேவைகள் மற்றும் முன் மருத்துவமனை பராமரிப்பை எவ்வாறு வழங்க வேண்டும் என்ற முறைமை தொடர்பில் சுகாதார அமைச்சரால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட விதிமுறைகள் யாவை?
அவற்றை இந்த சபையில் சமர்ப்பிக்க முடியுமா? - பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்கள், விசேட மருத்துவ நிபுணர்கள் மற்றும் தாதியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன.
முறையே 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இதுவரை நாட்டை விட்டு வெளியேறிய மருத்துவர்கள், விசேட மருத்துவ நிபுணர்கள் மற்றும் தாதியர்கள் (ஆண்-பெண்), ஏனைய மருத்துவ நிபுணர்களின் அவர்களினது தொடர்புடைய துறைகளுடன் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்? - இதன் விளைவாக அரச மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கையையும் வெவ்வேறாக இந்த சபையில் சமர்ப்பிக்க முடியுமா ?
சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்களுக்கு போதுமான சம்பளம் இல்லாததுதான் இந்த மூளைசாலிகள் வெளியேற்றத்துக்கு காரணம் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா?
இந்த மூளைசாலிகள் வெளியேற்றத்தைத் தடுப்பதற்கு சுகாதார அமைச்சு இதுவரை எடுத்துள்ள குறிப்பிட்ட நடவடிக்கைகள் யாது? - சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்யும் அரச வைத்தியசாலைக்களுக்கு அதற்குத் தேவையான AVF (Needles) உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா?
இதனால் உதவியற்றவர்களாக காணப்படும் சிறுநீரக நோயாளிகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விரைந்து எடுக்கும் நடவடிக்கைகளை என்ன? - கெபிதிகொல்லாவ போன்ற தொலைதூரப் பகுதிகளில் காணப்படும் அரச வைத்தியசாலைகளில் நிலவும் பௌதீக மற்றும் மனித வளங்கள் பற்றாக்குறை காரணமாக இந்த வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனுபவிக்கும் சிரமங்கள் குறித்து அரசாங்கத்தின் உத்தேச அவசரத் திட்டம் என்ன?
இப் பகுதிகளுக்கு மிகவும் அவசியமான புதிய வைத்தியசாலைக் கட்டிடத் தொகுதிகள் மற்றும் அறுவை சிகிச்சை கட்டிடத் தொகுதிகளை நிர்மாணித்தல், டயாலிசிஸ் பிரிவை அபிவிருத்தி செய்வதல், பணியாளர் குழாத்துக்கான உத்தியோகபூர் இருப்பிட வசதிகள் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதா ? இல்லையென்றால், ஏன்? - கல்வி பொதுத் தராதர (சாதாரண தரம்) தகுதி கொண்ட நுளம்பு கட்டுப்பாட்டு கள உதவி உத்தியோகத்தர்கள் 301 பேர்களினது ஒப்பந்த சேவை காலத்தை ஒரு வருடம் அதிகரிப்பதற்கு 2023.10.01 ஆம் திகதி அமைச்சரவை திருத்தமொன்று அனுப்பப்பட்டாலும், 2025 ஆம் ஆண்டில் இந்த உத்தியோகத்தர்களின் ஒப்பந்த காலத்தை நீட்டிக்க அமைச்சரவை திருத்தமொன்றை சமர்ப்பிக்காமைக்கான காரணங்கள் என்ன?
- இந்த ஒப்பந்த காலம் நீட்டிக்கப்படாமையால் நுளம்பு கட்டுப்பாட்டு கள உதவி உத்தியோகத்தர்கள் அனுபவிக்கும் சிரமங்கள் மற்றும் பொருளாதார சிக்கல்கள் குறித்து அரசாங்கம் அறிந்திருக்கிறதா?
நுளம்பு கட்டுப்பாட்டுச் சேவையானது நாட்டின் பொது சுகாதாரப் பாதுகாப்பிற்கு அத்தியாவசியமானதொரு சேவையாக காணப்படுவதால், இந்த ஊழியர்களின் சேவையைத் தொடர்ச்சியாக பேணிச் செல்லவதற்கும், அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்திடம் ஏதேனும் திட்டம் காணப்படுகின்றனவா ? - இந்த நுளம்பு கட்டுப்பாட்டு கள உதவி உத்தியோகத்தர்களை நிரந்தர சேவையில் உள்ளீர்த்துக் கொள்வதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவை எடுத்துள்ளதா? அவ்வாறானால், அதற்கான கால சட்டகம் யாது ?
இருதய அறுவை சிகிச்சைகளுக்கான வரிசை 2029 ஆம் ஆண்டு வரை நீண்டு காணப்படுகின்றன.
வைத்தியசாலை கட்டமைப்பில் பெரும் பற்றாக்குறை நிலவுகின்றன. இருதய அறுவை சிகிச்சைகளுக்கான வரிசை 2029 ஆம் ஆண்டு வரை நீண்டு காணப்படுகின்றன. இது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் வேண்டுகோள் விடுத்தார்.

