
பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5% அதிகரிப்பு
எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணங்களை இன்று (10) முதல் அமலுக்கு வரும் வகையில் 5 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ, இதற்கு முன்பு பலமுறை எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் செய்யவில்லை என குறிப்பிட்டார்.
ஆனால் இம்முறை டீசல் விலை 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், ஏனைய சங்கங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, குறித்த கட்டண திருத்தம் இன்று முதல் அமலுக்கு வரும் என லலித் சந்திரசிறி பெர்னாண்டோ தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “திடீரென எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. எமது சங்கமாக 5 வீதத்தால் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளோம். அதன்படி, ஒரு மாணவருக்கான கட்டணம் 10,000 ரூபாவாக இருந்தால், அது 500 ரூபாவால் அதிகரிக்கும். 22 ரூபா டீசல் விலை உயர்வு போக்குவரத்து துறையில் எமக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. விருப்பம் இல்லாவிட்டாலும் இந்த முடிவை எடுக்க வேண்டியதாகியுள்ளது” என்றார்.

