
கடுமையான வெப்பம் ; பாடசாலைகள் , பணியிடங்களுக்கு புதிய வழிகாட்டல்
நாடு முழுவதும் நிலவும் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக, வெப்பத்துடன் தொடர்புடைய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு, பாடசாலைகள் மற்றும் பணியிடங்களில் அன்றாடச் செயல்பாடுகளில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீரிழப்பு, வெப்பத்தாக்கம் மற்றும் தோல் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் அதிகமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் தவிர்த்து, அதிகாலை அல்லது மாலை நேரங்களில் நடத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளியில் பணியாற்றுவோரின் நலனை கருத்தில் கொண்டு, பணிகளை முற்பகல் 10.30 மணிக்கும் முன்னதாக அல்லது பிற்பகல் 3.30 மணிக்குப் பின்னர் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நண்பகல் நேரங்களில் நேரடி சூரிய ஒளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதுடன், கட்டிடங்களில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறந்து வைத்து காற்றோட்டத்தை உறுதிப்படுத்துதல் அல்லது குளிரூட்டும் வசதிகளை பயன்படுத்துதல் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தினமும் குறைந்தது 2.5 லீற்றர் நீர் அருந்த வேண்டும் என்றும், சர்க்கரை கலந்த பானங்கள், கார்பனேற்றப்பட்ட பானங்கள் மற்றும் மதுபானங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடலில் நீர்ச்சத்து போதுமான அளவில் உள்ளதா என்பதை சிறுநீரின் நிறத்தைக் கொண்டு அவ்வப்போது கவனிக்க வேண்டியது முக்கியம் என சுகாதாரத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
வெளியில் செல்லும் போது குடை, தொப்பி அல்லது முழு உடலை மூடும் ஆடைகளை அணிய வேண்டும் என்பதுடன், வாகன சாரதிகள் வெயிலில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்குள் ஏறுவதற்கு முன் ஜன்னல்களைத் திறந்து உள்ளக வெப்பத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

