பிரதமருக்கும் கீதா கோபிநாத்திற்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் கீதா கோபிநாத்திற்கும் இடையில் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் அவர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜூன் 16 ஆந் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டமைக்கும் பாதையில் இலங்கை பயணிக்கின்ற சூழ்நிலையில், சர்வதேச பங்குதாரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கலாநிதி கீதா கோபிநாத் இதன்போது கவனம் செலுத்தினார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் புதிய அரசாங்கம் பின்பற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் செயற்திறமான அணுகுமுறையை கலாநிதி கோபிநாத் பாராட்டியதுடன், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் அரசாங்கத்தின் முயற்சிகளில் சர்வதேச நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் பொருளாதார சீர்திருத்த சட்டகம், இலங்கையை போலவே நிதி மற்றும் கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்ளும் ஏனைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது என்றும் கலாநிதி கோபிநாத் குறிப்பிட்டார்.

image

அதிகளவான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், எரிசக்தி போன்ற மூலோபாயத் துறைகளில் நிலையான மற்றும் பெரிய அளவிலான முன்னேற்றங்களின் நீண்டகால நம்பகத்தன்மைக்கு இது மிகவும் முக்கியமானது என்பதால், இது குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடினர்.

நிர்வாகத்தை மேம்படுத்துதல், நிறுவனங்களை பலப்படுத்துதல் மற்றும் அரச மற்றும் அரச நிதி முகாமைத்துவத்தின் அனைத்து மட்டங்களிலும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்தல் ஆகியவை நிர்வாகத்தின் முன்னுரிமைகளாக உள்ளன என்றும், அனைத்து பொருளாதார மீட்பு நடவடிக்கைகளையும் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுப்பதற்கும், மக்களின் நலனில் கவனம் செலுத்துவதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் சமூகப் பாதுகாப்பு பொறிமுறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள தொழிற்படையை வலுவூட்டுவதற்கும் கல்வித் துறையில் சீர்திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

image
image

சமூக நீதியை முன்னேற்றுவதற்கும் பேண்தகு அபிவிருத்து இலக்குகளை அடைவதற்கும் கல்வி சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் பிரதமர் கூறினார்.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் தற்போதைய சீர்திருத்தத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்ததுடன், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கலாநிதி கோபிநாத் வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், கலாநிதி மார்ட்டின் காஃப்மேன் (ஆலோசகர்), கலாநித கிருஷ்ணா ஸ்ரீனிவாசன், கலாநிதி பீட்டர் பூவர், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பொருளாதார விவகாரப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் தர்ஷன எம். பெரேரா மற்றும் இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )