
டித்வா சூறாவளிப் புயல் தொடர்பில் முன் அறிவிப்புச் செய்யப்படும் வேளை, அரசாங்கம் அதற்கேற்ப செயற்படாமை பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகளை மீறும் செயலாகும்
இந்த வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக ஏற்படும் அனர்த்தங்கள் மற்றும் அபாயங்கள் குறித்து தெரிவிக்கும் முறையான முன்னெடுப்பு நடவடிக்கை உரியவாறு இயங்கவில்லை என்பது தெரியவருகிறது.
அறிக்கைகளின்படி, நமது நாட்டில் 611,000 குடும்பங்களைச் சேர்ந்த 2,100,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல் எண்ணிக்கையிலான மக்கள் காணாமல் போயுள்ளனர். அதேபோல் உயிரிழப்புகளும் சொத்து இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்த அழிவு அபாயத்தை முன்கூட்டியே மக்களுக்கு அறிவித்திருந்தால், இழப்புகளை ஓரளவுக்குக் குறைத்திருக்கலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பேரிடரால் பாதிக்கப்பட்டு வரகாபொல, கலபிடமட, கபுகொட தோட்டம் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாமில் இருந்து வரும் மக்களைச் சந்தித்து அவர்களின் சுக துக்கங்களை கேட்டறிய நேற்று (08) அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்தபோது, இடர் முகாமைத்துவ நிலைய பொறிமுறை ஏன் உரியவாறு செயற்படாது போனது என்பதை நினைத்துப் பார்க்க முடியாதுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள், செய்திச் சேவைகள் மற்றும் வானிலை முன்னறிவிப்பு நிறுவனங்கள் 15 நாட்களாக எச்சரிக்கை விடுத்த போதிலும், இதுபோன்ற ஆபத்து இருந்தபோதிலும் இடர் முகாமைத்துவ பொறிமுறை ஏன் முறையாக இயங்கவில்லை என்ற விடயத்தில் பிரச்சினை காணப்படுகின்றன.
அனர்த்தம் குறித்து அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காதிருப்பது பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகளை மீறும் செயலாக அமைந்து காணப்படுகின்றன.
சுனாமியிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளாவிட்டாலும், இந்தப் பேரழிவிலிருந்தேனும் நாம் பாடம் கற்றுக்கொண்டு, நமது நாட்டில் ஏற்படும் பல்வேறு வானிலை மற்றும் காலநிலை தாக்கங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடர் முகாமைத்துவ பொறிமுறையை நாம் மாற்றியமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

